Saturday, December 4, 2010

சீனாவிற்கு இரும்புத்தாது ஏற்றுமதி கடும் சரிவு

ஆல்பம்

பீஜிங்:இந்தியாவிலிருந்து சீனாவிற்கு, இரும்புத்தாது ஏற்றுமதி வரலாறு காணாத சரிவை கண்டுள்ளது.இந்தியா, பிரேசில் மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலிருந்து சீனா இரும்புத் தாதுவை இறக்குமதி செய்கிறது. ஆனால், சீனாவின் இரும்புத்தாது இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது. சீனாவின் 20 சதவீத இரும்புத்தாது தேவையை இந்தியா பூர்த்தி செய்கிறது.இந்த நிலையில், சீனாவிற்கு இந்தியாவிலிருந்து இரும்புத்தாது இறக்குமதி கடும் சரிவை சந்தித்துள்ளதாக சுங்கத்துறை வெளியிட்டுள்ள புள்ளி விவர அறிக்கை தெரிவிக்கிறது. கடந்த அக்டோபர் மாதத்தில் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் இரும்புத்தாது 6.4 சதவீதம் குறைந்தது. இது கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தை ஒப்பிடுகையில் 44 சதவீதம் குறைவாகும்.மேலும், செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடும்போது 39 சதவீதம் அளவிற்கு இரும்புத்தாது இறக்குமதி சரிவை சந்தித்துள்ளது.


இதுகுறித்து இரும்புத்தாது ஏற்றுமதி மற்றும் இறக்குமதி துறை வல்லுனர் கோஸ்வாமி கூறியதாவது:சீனாவிலுள்ள சிறு மற்றும் நடுத்தர தொழிற்சாலைகளில் இந்திய இரும்புத் தாதுக்கு கடும் கிராக்கி நிலவுகிறது. சீனாவின் இரும்புத்தாது இறக்குமதி சந்தையில் இந்தியா முக்கிய இடத்தை வகிக்கிறது.இந்த நிலையில், கர்நாடகத்திலிருந்து இரும்புத்தாது ஏற்றுமதி செய்வதற்கு அம்மாநில அரசு தடை விதித்ததால், இந்தியாவிலிருந்து இரும்புத்தாது இறக்குமதி கிடுகிடுவென சரிந்துவிட்டது. இந்தியாவின் மொத்த இரும்புத் தாது ஏற்றுமதியில், நான்கில் ஒரு பங்கு இடத்தை கர்நாடகா பிடித்துள்ளது. கடந்த 20 ஆண்டுகளாக சீன இரும்புத்தாது இறக்குமதி சந்தையில் இந்தியா கோலோச்சி வந்தது. ஆனால் தற்போது நிலைமை தலைகீழாகிவிட்டது.


இதன் காரணமாக, சீனாவிலுள்ள தொழிற்சாலைகள் பிரேசில் உள்ளிட்ட நாடுகளிலிருந்து இரும்புத்தாது இறக்குமதி செய்யத் துவங்கி உள்ளன. இதனால், பிரேசிலில் இருந்து சீனாவிற்கு இரும்புத்தாது இறக்குமதி கணிசமாக உயர்ந்து வருகிறது. எனவே, சீனாவின் இரும்புத்தாது இறக்குமதி சந்தையில் இந்தியாவிற்கு உள்ள இடத்தை தக்க வைத்துக்கொள்ள வேண்டியது அவசியம்.இவ்வாறு கோஸ்வாமி கூறினார்.

No comments:

Post a Comment