Saturday, December 4, 2010

பெரிய மாற்றங்கள் இருக்க வாய்ப்பில்லை

பெரிய மாற்றங்கள் இருக்க வாய்ப்பில்லை





வெளிநாட்டு பணவரத்து மறுபடி துவங்கியிருக்கிறது, சந்தைகள் குறைந்து இருப்பதால், உள்நாட்டிலும் வாங்குபவர்கள் இருந்தனர். ஆதலால், சந்தைகள் இந்த வாரம் திங்கள் முதல் வியாழன் வரை, ஏற்றத்திலேயே இருந்தது. வியாழனன்று ஏற்றத்திற்கு மேலும் ஒரு காரணம், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, வருங்காலங்களில் நன்றாக இருக்கும் என்ற நம்பிக்கை அதிகமாக இருந்ததால், சந்தைகளிலும் அது தெரிந்தது.

சந்தை வியாழனன்று, 143 புள்ளிகள் மேலே சென்று முடிந்தது. தொடர்ந்து நான்கு நாட்களாக ஏறிக்கொண்டிருந்த சந்தை, வெள்ளியன்று ஏற்றத்தை இழந்தது. அன்று, பெரிய இறக்கம் இல்லாமல் முடிந்தது.

வெள்ளியன்று இறுதியாக, மும்பை பங்குச் சந்தை, 26 புள்ளிகள் குறைந்து, 19 ஆயிரத்து 966 புள்ளிகளுடனும், தேசிய பங்குச் சந்தை, 18 புள்ளிகள் குறைந்து, 5,992 புள்ளிகளுடனும் முடிந்தது. பொதுவாக, சந்தைக்கு இந்த வாரம் லாபமான வாரம் தான்.

வாரிக் கொடுத்த வள்ளல் ப்ரேம்ஜி: ப்ரேம்ஜியை தெரியாதவர்கள் இருக்க முடியாது. சாதாரண ஒரு எண்ணெய் கம்பெனியை மிகப்பெரிய ஒரு சாம்ராஜ்யமாக உருவாக்கியவர். இன்று விப்ரோ என்றால் என்ன என்று, ஒரு சின்னப்பிள்ளையை கேட்டால் கூட சொல்லிவிடும், சாப்ட்வேர் கம்பெனி என்று. ஒரு லட்சத்திற்கும் அதிகமானவர்கள் வேலை பார்க்கும் கம்பெனி அது. ஆரம்ப காலத்தில் விப்ரோ பங்குகள் வாங்கி தற்போது வரை வைத்திருப்பவர்கள், கோடிக்கணக்கான ரூபாய்க்கு அதிபதியாக இருக்கும் கதைகள், அனைத்து பத்திரிகைகளிலும் வந்தது தான்.

அந்த கம்பெனியின் நிறுவனர் தன் சொத்தில் இருந்து, 8,846 கோடி ரூபாயை அறக்கட்டளைக்காக கொடுத்துள்ளார். சம்பாதிப்பதில் அறக்கட்டளைக்காக கொடுப்பதில் உயர்ந்தவர் மைக்ரோசாப்ட்டின் பில் கேட்ஸ் தான். இவரை இனி இந்தியாவின் பில்கேட்ஸ் என அழைக்கலாம். வாரிக்கொடுத்த செய்தி வந்த பின், சந்தையில் விப்ரோவின் பங்குகள் உயர்ந்து, முதலீட்டாளர்களுக்கு லாபங்களை வாரிக்கொடுத்தது.

வங்கி வட்டி விகிதங்கள்: வங்கிகள் டிபாசிட்களுக்கான வட்டி விகிதங்களை கூட்ட வேண்டும், அதே சமயம் கடன்களுக்கான வட்டி விகிதங்களை குறைக்க வேண்டும் என, ரிசர்வ் வங்கி கேட்டுக் கொண்டுள்ளது. இது, கம்பெனிகள் கடன்கள் வாங்குவதற்கு எளிதாக இருக்கும், அது, நாட்டின் முன்னேற்றத்திற்கு வழி வகுக்கும் என்பதால் தான்.

ஷிப்பிங் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா: இந்த கம்பெனியின் தொடர் வெளியீட்டை பற்றி, வியாழனன்று எழுதியிருந்தோம். பலரின் எண்ணமும் அதுவாகவே இருந்ததால், வெளியீட்டுக்கு ஒரு நாள் முன்பு வரை, அதிகளவு செலுத்தப்படாமல் இருந்த சிறிய முதலீட்டாளர்கள் பகுதி, கடைசி தினம் அன்று நோயாளிக்கு ஏறிக்கொண்டே போகும் பி.பி., போல, கட்டுப்படுத்தமுடியாமல் மேலே சென்று கொண்டே இருந்தது.

அன்றைய தினம் கடைசியாக, சிறிய முதலீட்டாளர்கள் பகுதி, 6.56 தடவைகள் செலுத்தப்பட்டிருந்தன. மொத்தமாக இந்த வெளியீடு, 4.92 தடவைகள் செலுத்தப்பட்டிருந்தன. தற்போது நமது முன்னே நிற்கும் கேள்வி, எந்த விலை நிர்ணயிக்கப்போகின்றனர் என்பது தான். 135 ரூபாய் என நிர்ணயித்தால், முதலீட்டாளர்களுக்கு லாபம்.

வரும் வாரங்களில் என்னென்ன புதிய வெளியீடுகள் வரப்போகின்றன என அடுத்த வாரம் பார்ப்போம். மாதக்கடைசியில் எந்த வெளியீடும் வர வாய்ப்பு இல்லை. ஏனெனில், உலகமே கிறிஸ்துமஸ் கொண்டாடிக் கொண்டிருக்கும் வேளையில், சந்தைகளில் வெளியீடுகள் வராது. கட்டுமானத்துறை ஐ.பி.ஓ.,: கட்டுமானத்துறையில் கடன் வழங்குவதில் ஏற்பட்ட ஊழல்கள், சந்தையை மிகவும் பாதித்தது. அது, சந்தையை மட்டும் பாதிக்கவில்லை, அந்தத் துறையையும் மிகவும் பாதித்துள்ளது.

எம்மார் எம்.ஜி.எப்., லோதா போன்ற கம்பெனிகள் கொண்டு வரவிருந்த, 13 ஆயிரம் கோடி ரூபாய்க்கான புதிய வெளியீடுகளை தற்போது நிறுத்தி வைத்துள்ளன. ஏனெனில், தற்போது சென்டிமென்ட் சரியில்லை. எப்போது வரும் என தெரியவில்லை. ஏற்றம் தரும் ஏற்றுமதி: கடந்தாண்டு அக்டோபர் மாத ஏற்றுமதியை விட, இந்தாண்டு அக்டோபர் மாத ஏற்றுமதி, 21.6 சதவீதம் கூடியுள்ளது.

இந்த அக்டோபரில், 18 பில்லியன் டாலர் ஏற்றுமதி செய்துள்ளோம். வரும் மார்ச் மாதத்திற்குள், 200 பில்லியன் டாலர் ஏற்றுமதி என்ற இலக்கை எட்டி விடுவோம் என்ற நம்பிக்கை எல்லாருக்கும் தற்போது வந்துள்ளது. அடுத்த வாரம் எப்படி இருக்கும்? சந்தை இந்த வாரம் புது ரத்தம் பாய்ச்சியது போல சிறிது தெம்பாக இருந்தது. காரணம், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வாங்கியது தான். இல்லாவிடில், எம்.ஓ.ஐ.எல்., வெளியீடு இவ்வளவு அதிகமாக செலுத்தப்பட்டவிதத்திற்கு சந்தை சிறிது வெளுத்திருக்கும். அடுத்த வாரம் சந்தையில் வெளியீடுகள் இல்லை. மேலும் பெரிய மாற்றங்கள் இருக்க வாய்ப்புகள் இல்லை.

No comments:

Post a Comment