Friday, December 3, 2010

கோடிக்கரை சரணாலயம்

கோடிக்கரை சரணாலயம்

தமிழ்நாட்டில் உள்ள இந்த சரணாலயம் வன விலங்குகள் சரணாலயம், பறவைகள் சரணாலயம், இரண்டுமே ஒன்றிணைந்ததாக உள்ளது.

இதன் அருகே அமைந்துள்ள விமான நிலையமான திருச்சி விமான நிலையம் இங்கிருந்து 232 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. கோடிக்கரை ரயில் நிலையத்திலிருந்து மேற்கே அரை கிலோ மீட்டர் தூரத்தில் இந்த சரணாலயம் அமைந்துள்ளது.

இங்கே 17 சதுர கிலோ மீட்டர் பரப்பு தான் வன விலங்குகள் சரணாலயப் பகுதியாக ஒதுக்கப்பட்டிருந்தாலும் இதற்கு மேற்கே 80 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ராஜாமடம் வரை சதுப்பு நிலக் காடுகள் உள்ளன. இந்தக் காடுகள் இரண்டு இடங்களில் உப்பங்கழிகளாக கடல் நீர் புகுந்து உப்பு ஏரியாக 30 கிலோ மீட்டர் நீளம் 5 கிலோ மீட்டர் அகலத்துக்கு நிற்கின்றது.

இந்த உப்பு ஏரிகளில் முத்துப்பேட்டை, திருத்துறை பூண்டி மற்றும் மேல்மருதூர் பகுதியிலிருந்து மூன்று நதிகள் சங்கமம் ஆகின்றன. ஆகவே இந்த உப்பேரியில் நிற்கும் தண்ணீர் கடல் நீர் அளவு உப்பாக இல்லை. இந்த ஏரி அதிக ஆழம் இல்லை. இந்த ஏரி நீரில் உள்ள மீன்கள் ஏராளம். இதோடு கடல் நீர் உயர் அலையின் போது நிலப்பகுதியில் ஏறி வரும். பிறகு வடியும். இப்படி வடியும் போது பள்ளப் பகுதியில் ஏறி வந்த நீர் கடலுக்குத் திரும்பிப் போகாது. பள்ளங்களில் அப்படியே தேங்கிவிடும். இப்படித் தேங்கும் நீரில் சிக்கிக் கொண்ட மீன்கள் கடலுக்குத் திரும்பிப் போக இயலாது தவித்து நிற்கும். இப்படித் தவித்து நிற்கும் மீன்கள் பறவைகளுக்கு நல்ல விருந்தாகும். ஆகவே தங்களுக்கு எளிதாக உணவு கிடைக்கும் இந்த இடத்தை நீர்ப்பறவைகள் மிகுதியாக விரும்பி இங்கே வந்து குவிகின்றன. மரங்களில் கூடுகள் அமைத்துக் கொண்டு வாழுகின்றன.

ராஜஹம்சம் (ஹம்சம் - அன்னம்) மரங்களில் கூடுகட்டி வாழக் கூடியது அல்ல. அது பகல் இரவு எந்த நேரமும் தண்ணீரில் இருக்கக் கூடியது. தண்ணீரிலேயே தூங்கவும் கூடியது. இதன் பிரதான ஆகாரம் மீன். இதற்கு தங்குவதற்கான நீர் வசதியும் மீனும் இங்கே கிடைப்பதால் அவையும் இங்கே தேடி வருகின்றன. குஜராத்தில் கட்ச் பகுதியிலிருந்து அக்டோபரில் ராஜஹம்சங்கள் இங்கு வரத் தொடங்குகின்றன. நான்கு மாதங்கள் இங்கு வசிக்கின்றன. பிறகு ஜனவரி பிப்ரவரியில் திரும்பிப் போய் விடுகின்றன. நெடுந்தூரம் பறந்து செல்லும் சக்தியை இழந்த நிலையில் உள்ள அன்னங்கள் மட்டும் இங்கேயே நிரந்தரமாகத் தங்கி விடுகின்றன. வயோதிக நிலையில் இவை இருப்பதால் இங்கு அவை முட்டையிடுவதும் இல்லை, குஞ்சு பொரிப்பதும் இல்லை. வருடம் சுமார் 40 ஆயிரம் ராஜஹம்சங்கள் இங்கே வந்து போகின்றன.

நீர் வாத்துக்களும் இந்த இடத்தை விரும்பி வருகின்றன. வருடம் சுமார் இரண்டாயிரம் நீர் வாத்துக்கள் பருவ காலத்தில் இங்கு வந்து போகின்றன.

இங்கே உள்ள வன விலங்குச் சரணாலயத்தில் பலவித மான்கள் முக்கியமாக கருமான்கள் மற்றும் காட்டுப் பன்றிகள் அதிகமாக உள்ளன.

பருவகாலம் ஜனவரியிலிருந்து செப்டம்பர் வரை.

No comments:

Post a Comment