Wednesday, December 1, 2010

பெய்யும் கன மழை-நீரில் தத்தளிக்கும் தமிழகம்

தொடர்ந்து பெய்யும் கன மழை

நீரில் தத்தளிக்கும் தமிழகம்


Image
tamilnadu weather

சென்னை.,

தமிழகம் முழுவதும் வட கிழக்குப் பருவ மழை மீண்டும் சூடு பிடித்துள்ளதால் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் கன மழை வெளுத்துக் கட்டிக் கொண்டிருக்கிறது. இதனால் தமிழகத்தின் பல பகுதிகளிலும் வெள்ள நீரில் மிதக்கின்றன.

கடந்த 2 வாரங்களாக தமிழகத்தை, குறிப்பாக தென் மாவட்டங்கள், காவிரி டெல்டா மாவட்டங்களைப் புரட்டிப் போட்டு வரும் வட கிழக்குப் பருவ மழை, தமிழகத்தின் இயல்பு வாழ்க்கையை கடுமையாக பாதித்துள்ளது.

வீராணம் ஏரி நிரம்பியது:

கடலூர் மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் வீராணம் ஏரி நிரம்பி வழிகிறது. அதிலிருந்து பெருமளவில் உபரி நீர் வெளியேறி வருவதால் அருகில் உள்ள 20 கிராமங்களை நீர் சூழ்ந்து தீவு போல மாற்றியுள்ளது.

இதனால் அந்தக் கிராமங்கள் பிற பகுதிகளிலிருந்து துண்டிக்கப்பட்டுள்ளன. இதையடுத்து அந்தக் கிராமங்களில் வசிப்போருக்கு படகுகள் மூலம் உணவுப் பொட்டலங்களை வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

பெரம்பலூரில்:

பெரம்பலூர் மாவட்டத்தில் பெய்த கன மழையால் வெள்ளாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அங்கு கரையோரப் பகுதிகளில் வசிப்போர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.

அரியலூரில்:

அரியலூர் மாவட்டத்திலும் மழை வெளுத்து வாங்குகிறது. அங்குள்ள சுப்பராயபுரம் சாலையில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிகப் பாதை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு விட்டது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து தடை பட்டுள்ளது.

காவிரி டெல்டா மாவட்டங்களில் பயிர்கள் மூழ்கின:

காவிரி டெல்டா பகுதிகளில் மழை விட்டபாடில்லை. தொடர்ந்து மழை கொட்டித்தீர்த்துக் கொண்டிருக்கிறது.

தஞ்சை, கும்பகோணம், நாகை, திருவாரூர் மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது.

மன்னார்குடி கோரையாற்றில் உடைப்பு ஏற்பட்டதால் 300 வீடுகளை நீர் சூழ்ந்துள்ளது.

திருவாரூரில் தொடர் மழை காரணமாக மாவட்டத்தில் 30,000 ஏக்கர் நெற் பயிர்கள் மூழ்கியுள்ளன. மேலும் மாவட்டத்தில் ஆறுகளும் நிரம்பி ஊர்களுக்குள் தண்ணீர் புகுந்து வருகிறது.

நாகையில் ஏற்பட்ட ஆற்று வெள்ளத்தில் சிக்கி 2 பேர் உயிரிழந்தனர்.

15 நாட்களாக குமரியில் கன மழை:

தென் மாவட்டங்களை தொடர்ந்து கன மழை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 2 வாரங்களாக தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இதனால் அங்கு ரப்பர் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ரூ. 100 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.

ராமநாதபுரம், விருதுநகர், திண்டுக்கல் உள்ளிட்ட அனைத்து தென் மாவட்டங்களிலும் மழை வெளுத்து வாங்கி வருகிறது.

பலி எண்ணிக்கை தொடர்ந்து உயர்வு:

மழைக்குப் பலியானோரின் எண்ணிக்கை ஏற்கனவே 100 ஐத் தாண்டி விட்டது. தொடர்ந்து கன மழை பெய்து வருதவாலும், மிக பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதாலும், பலி எண்ணிக்கை மேலும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மேட்டூர் அணை நிரம்ப 1 அடி பாக்கி:

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 119 அடியாக உயர்ந்துள்ளது. அணை தனது முழுக் கொள்ளளவை நாளை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்ந்து பெய்து வரும் கன மழையால் தமிழகத்தின் முக்கிய அணைகள் நிரம்பி வருகின்றன. வைகை அணை ஏற்கனவே நிரம்பி திறந்து விடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் காவிரி டெல்டா பகுதி விவசாயிகளின் உயிர் நாடியான மேட்டூர் அணை இந்த ஆண்டில் முதல் முறையாக நிரம்பவுள்ளது.

அணைக்கு தற்போது விநாடிக்கு 11,742 கன அடி நீர் வந்து கொண்டுள்ளது. அணையின் நீர் மட்டம் இன்று பிற்பகல் நிலவரப்படி 119 அடியாக இருந்தது.

அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து இருப்பதால் தனது முழுக் கொள்ளளவையும் ல(120 அடி) மேட்டூர் அணை நாளை எட்டும் என்று தெரிகிறது.

மேட்டூர் நிரம்புவதாலும், தொடர்ந்து மழை பெய்து வருவதாலும், விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

No comments:

Post a Comment